Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 499 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
499திருப்பாவை || ‘பெண்காள்! “உன்னை யருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்” என்கிறீர்கள்; நம்முடைய ஸம்ஸ்லேஷ ரஸத்திலே உத்ஸாஹமுடையவர்கள் வேறொன்றை விரும்பக் கூடாமையாலே, அதென் சொன்னீர்களென்று அதிலே ஒரு ஸம்சயம் பிறவா நின்றது; அதாகிறது எது? அதற்கு மூலம் எது? அதற்கு வேண்டுவன எவை? அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை? இவற்றை விரியச் சொல்லுங்கள்’ என்று கண்ணபிரான் நியமித்தருள, அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘பிரானே! உன் முகவொளியை வெளியிலே கண்டு உன் திரு நாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாயிருப்பதொரு நோன்பை இடையர் ப்ரஸ்தாவிக்கையாலே உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமா யிருக்கின்றமையைக் கருதி இடையர் பக்கலில் நன்றி ‘நினைவாலே’ அந்நோன்பிலே இழிந்தோம்; அதற்கு, முன்னோர்கள் செய்து போருவதொன்றுண்டு; அதற்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை; அவற்றையும் தந்தருள வேணுமென்று வேண்டிக் கொள்ளும் பாசுரம், இது. 26
மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
மாலே, maale - (அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா, maṇivanna - நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய், aalin ilaiyaay - (ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான், maargazhi neeraduvanaan - மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார், melaaiyaar - உத்தம புருஷர்கள்
செய்வனகள், seyvangaḷ - அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன, venduvana - வேண்டியவற்றை
கேட்டி ஏல், ketti ael - கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம், nyaalathai ellaam - பூமியடங்கலும்
நடுங்க, nadunga - நடுங்கும்படி
முரல்வன, muralvana - ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன, paal anna vaṇṇathu unpaanja sanniyame poalvana - பால் போன்ற நிறமுடையதான உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள், sangangal - சங்கங்களையும்
போய் பாடு உடையன, poi paadu udaiyana - மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு, saalap peru - மிகவும் பெரியனவுமான
பறை, parai - பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார், pallandu isaippar - திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு, kolam vilakku - மங்கள தீபங்களையும்
கொடி, kodi - த்வஜங்களையும்
விதானம், vidaanam - மேற்கட்டிகளையும்
அருள், arul - ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய், ael or em paavai - ஏல் ஓர் எம் பாவாய்